By April 26, 20180 CommentsReport

களத்தில் இறங்கும் ‘காளி’..!!

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் படங்கள் ஒவ்வொன்றின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஏப்ரல் 27) வெள்ளிக்கிழமை தியா, பக்கா, பாடம் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி தற்போது இயக்கிவரும் படம் காளி. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதனிடையே பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை வாங்கினார். அவர், அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்ட 4 கோடியே 73 லட்ச ரூபாய் நஷ்டத்தை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 79 லட்ச ரூபாயைக் கொடுத்து விட்டுத்தான் காளி படத்தை வெளியிடவேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில், விஜய் ஆண்டனி 4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டருக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தற்போது இந்தப் படம் வரும் மே 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.
Attachments area


Post a Comment

CAPTCHA
Refresh

*