By April 26, 20180 CommentsReport

சூர்யாவின் தங்கை சினிமாவில் அறிமுகம்..!!

Mr.சந்திரமௌலி’ திரைப்படத்தின் பாடல்கள் வெகு கோலாகலமாக ரிலீஸ் செய்யப்பட்டிருக்கின்றன. படத்தை உருவாக்கி லாபம் எடுப்பது உள்ளிட்ட வியாபாரத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும், சிறந்த முறையில் விளம்பரப்படுத்துவதில் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு தனி இடம் உண்டு. இதை மீண்டுமொரு முறை Mr.சந்திரமௌலி திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

சிவகுமாரின் குடும்பத்திலிருந்து அவர் உட்பட இரு மகன்கள், மருமகள் என நான்கு பேர் கலைத்துறை சார்ந்தவர்கள். இவர்களில் ஜோதிகா சினிமாவில் இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிப்பார் என்ற கேள்வி ஒருபுறம் பயணிக்கின்றன. அதேசமயம் சிவகுமார் குடும்பத்திலிருந்து, அவரது மகள் பிருந்தாவை திரைத்துறையில் Mr.சந்திரமௌலி படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

Mr.சந்திரமௌலி படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களில் ‘Mr.சந்திரமௌலி’ என்ற தீம் பாடலை பிருந்தா பாடியிருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பிருந்தாவுடன் இணைந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலைக் கேட்கும்போது இவ்வளவு திறமையுள்ள ஒருவரை இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா இழந்திருக்கிறதே என்ற எண்ணம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால், சிபாரிசுகளைப் பயன்படுத்தாமல் ஒருவர் சினிமாவில் கால் பதிக்க வேண்டுமென்றால் அது எவ்வளவு கஷ்டம் என்பதை பிருந்தா வெளிக்காட்டியிருப்பதாக நடிகர் சூர்யா இசை விழாவில் குறிப்பிட்டார்.

“70களில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும் மிஸ்டர் சந்திரமௌலியைப் பற்றி. கார்த்திக் சார் படங்களை பார்த்துதான் காதல்னா என்னன்னு கற்றுக் கொண்டோம். தனஞ்செயன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்கள் குடும்பத்தில் முக்கியமான விஷயங்களை அவர்தான் செய்திருக்கிறார். என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள்” என்று சூர்யா பேசினார்.

இவ்வளவு அரும்பாடுபட்டு சாம்.சி.எஸ் இசைக்கருவிகளுக்கிடையில் பிருந்தாவின் குரல் சிக்கிக்கொண்டதை நினைக்கும்போதும் பரிதாபமாக இருக்கிறது. சாம்.சி.எஸ் உருவாக்கியிருக்கும் தீம் பாடல் நன்றாக இருக்கிறது. பிருந்தாவின் குரல் தனித்துவமாகவும் இருக்கிறது. ஆனால், இரு பாம்புகளுக்கிடையேயான மோதலைப் போன்று பின்னிப் பிணைந்திருக்க வேண்டிய இசையும், குரலும் கீரிக்கும் பாம்புகளுக்குமிடையேயான உயிர்ப் போராட்டமாக மாறிப்போயிருப்பது ஏமாற்றம்தான். தொடர்ந்து மற்ற படங்களுக்குப் பாடல்கள் பலவற்றைப் பாட பிருந்தாவுக்கு வாழ்த்துகள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*