By April 27, 20180 CommentsReport

பாலியல் தொல்லை: மனம் திறக்கும் நடிகைகள்..!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளைப் பற்றி பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவும் மராத்தி நடிகை உஷா ஜாதவும் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

திரைத் துறையில் நடைபெறும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குரல்கள் அதிகரிப்பதும், தவறான செயல்களில் ஈடுபடுவோர் மக்கள் முன் அம்பலமாகி வருவதும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே திரைத் துறையில் நடிகைகளின் சம்மதத்தோடுதான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குத் தெலுங்கு நடிகர் ஸ்ரீரெட்டி உள்ளிட்ட நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிபிசியின் ‘பாலிவுட்ஸ் டார்கெஸ்ட் சீக்ரட்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தேவும் உஷா ஜாதவும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் ஒளிப்பரப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவிடம், ‘பாலிவுட் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “பாலிவுட்டில் ஒரு சிலர் கடவுள்களாகப் பார்க்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக யாரும் குரல் கொடுப்பதில்லை. அவ்வாறு குரல் கொடுத்தால் தங்கள் சினிமா வாழ்க்கைப் பாதிக்கப்படும் எனப் பலரும் அஞ்சுகின்றனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். பாலிவுட்டில் இனி பட வாய்ப்புக்காகப் பாலியல் துன்புறுத்தல்களைப் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்ற நிலை உண்டாக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மராத்தி நடிகை உஷா ஜாதவ், “திரைத் துறையில் அதிகாரம் உள்ளவர்கள் பெண்களிடம் பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். என்னிடமும் இது போன்ற சலுகை எதிர்பார்க்கப்பட்டது. பட வாய்ப்புக்காகத் தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் அல்லது அவர்கள் இருவரிடமும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது” என்று கூறியுள்ளார்.

அவர்களைத் தவிர சினிமாவில் வாய்ப்புத் தேடி கிராமத்திலிருந்து வந்த 25 வயது பெண் ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார். அதில், அவர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக பல்வேறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.

புரோமோவிலே பல விஷயங்கள் பகிரப்பட்டுள்ளதால், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, பல முக்கிய பிரபலங்கள் பற்றிய உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*