By April 27, 20180 CommentsReport

மெர்க்குரி: ஒரு போராட்ட வடிவம்..!!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று ‘மெர்க்குரி’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

வசனங்களே இல்லாமல், சைலண்ட் த்ரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் மெர்க்குரி. இதில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மெர்க்குரி’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று கோவையில் உள்ள தனியார் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “மெர்க்குரிக்கு மக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. வசனமே இல்லாத படத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. கார்ப்பரேட் க்ரைம்களினால் ஏற்படும் பாதிப்பை பேசுவதால் வெகுஜன மக்களை நிச்சயம் இந்தப் படம் கவரும். உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. அதிலிருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். சமூகம் சார்ந்த பொறுப்புணர்வுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதையும், நான் அவர்களிடம் கேட்க நினைத்த கேள்வியாகவே ‘மெர்க்குரி’ படத்தை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

“மக்கள் நியூட்ரினோவுக்கு எதிராகவும், மீத்தேனுக்கு எதிராகவும் சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள். நான் கலை வடிவில் போராட்டத்தைக் கொண்டுவர நினைக்கிறேன். ‘மெர்க்குரி’ படமும் ஒரு போராட்ட வடிவம்தான். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுதான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும். அதே போல் தயாரிப்பாளர் சங்க பிரச்சினையின்போது பிறமொழிப் படங்களெல்லாம் இங்கே திரையிடுகிறார்கள். அதேபோல, மொழியில்லாத மெர்க்குரியையும் வெளியிட வேண்டுகோள் விடுத்தோம்.

ஆனால் சில காரணங்களைச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அந்தக் காரணங்கள் நியாயமானதாக இருந்ததால் அதற்கு நாங்களும் உடன்பட்டோம். இருப்பினும் மற்ற மாநிலங்களில் படம் வெளியானபோது நம் மக்களுக்கு நம் மொழிப் படத்தைக் காட்ட முடியாதது வருத்தமாக இருந்தது. பிரச்சினைகளெல்லாம் முடிந்து முதல் திரைப்படமாக வந்திருக்கும் ‘மெர்க்குரி’யை மக்கள் கொண்டாடுகிறார்கள்” என்று விளக்கமளித்தார்.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்க இருக்கிறேன். அதற்கான கதை விவாதம் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இப்போது நடிகர், நடிகைகள் தேர்வு எதுவும் நடைபெறவில்லை” என்று பதிலளித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*