By April 30, 20180 CommentsReport

அவெஞ்சர்ஸ் படைக்கும் உலக சாதனை..!!

திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் வசூல் சாதனை படைப்பதில் ஹாலிவுட் திரைப்படங்களுக்குள்தான் எப்போதும் போட்டி நிலவிவருகிறது. நூற்றாண்டு கண்ட சினிமாவுலகில் இதுவரை வெளிவந்த அத்தனை படங்களையும் ஒரே பாய்ச்சலில் பின்னுக்குத் தள்ளி வசூலில் முன்னணியில் நிற்கிறது கடந்த வெள்ளி (ஏப்ரல் 27) அன்று வெளியான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் திரைப்படம்.

ஹாலிவுட் படங்களுக்கு சர்வதேச சினிமா சந்தையில் எப்போதும் தனி இடம் உண்டு. சூப்பர் ஹீரோக்களின் அதீத சாகசங்கள்தான் ஹாலிவுட்டை நோக்கி பல்வேறு நாட்டு மக்களையும் ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. அத்தனை ஹீரோக்களும் ஒரே படத்தில் மிரட்டியிருப்பது அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தை நோக்கி ரசிகர்களை படையெடுக்கவைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்தப் படம் உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் மூன்று நாள்களில் 500 மில்லியன் டாலர் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 630 மில்லியன் டாலர் வசூல் ஈட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 4,186.98 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு வெளியான தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ் திரைப்படம் 542 மில்லியன் டாலர் வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் திரைப்படம் 250 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 1,661.50 கோடி ரூபாய் ஆகும். இது முதல் மூன்று நாள்கள் வசூலித்த தொகை மட்டுமே. வரும் வாரங்களிலும் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் வெளியான பிளாக் பாந்தர் திரைப்படம் தமிழகம் உட்பட இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் நடத்தியதால் தமிழில் ஐம்பது நாள்களுக்கும் மேலாக எந்த புதிய படமும் வெளியாகவில்லை. இதனால் சென்னை உட்பட பல நகரங்களில் பிளாக் பாந்தர் திரைப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது. இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் அதிகரித்துவருவதால் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 2,000 திரையரங்குகளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*