By April 30, 20180 CommentsReport

அமலா பால்: முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்..!!

இன்ஸ்டாகிராமில் நடிகை அமலா பால் உருவாக்கியிருக்கும் உலகம் மிக அழகானது. அவரது அன்றாட வாழ்வை பொதுவில் பதிவு செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை. ‘எங்கு செல்கிறேன் என யாரிடமும் சொல்லாமல் ஓடிவந்துவிட்டேன்’ என தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களிடம் சொல்லும் அளவுக்கு அவர்களுடனான அமலா பாலின் வாழ்வு நெருங்கியிருக்கிறது. இதை இன்னுமொரு பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார் அமலா பால்.

பல மாதங்களாக முயற்சி செய்துவரும் சிரசாசனம் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டது குறித்து நீண்ட பதிவொன்றை வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறார் அமலா.

“நேற்று நான் எங்கிருந்தேன். அடுத்து நான் எங்கிருக்கப்போகிறேன் என்பதெல்லாம் முக்கியமில்லை. நான் எங்கிருக்கிறேனோ, அங்கேயே யோகா நிகழ்கிறது.

சில நாட்கள் யோகா பற்றி நான் கஷ்டமாக நினைத்தாலும், ஒரு நாள் கூட நான் அதைப் பிரிந்ததில்லை. சிரசாசனத்தை வெற்றிகரமாக முடிக்க நான் பெரும் பாடுபட்டேன். என் உடலின் கீழ்ப்பகுதியைவிட, மேல்பகுதி பலவீனமாக இருப்பதால் என்னால் அந்த ஆசனத்தை செய்யமுடியவில்லை.

என் ஆசிரியர் அல்லது சுவரின் உதவியுடன் மட்டுமே அந்த ஆசனத்தை செய்யமுடிந்தது. ஆனால், அதில் எனக்கு திருப்தி இல்லாததால், எனது சௌகரியமான இடத்தைவிட்டு வெளியில் சென்று முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது. எனவே எனது எல்லைகளைத் தளர்த்தி தொடர்ந்து முயற்சி செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை கீழே விழுந்தபோதும், நான் தோற்பதாக நினைக்கவில்லை. மாறாக, எனது உடலின் பலத்தை அதிகரிப்பதாக நினைத்தேன். பூங்காவுக்குச் சென்று அங்கிருந்த இயற்கையிடம் என்னை முழுமையாக ஒப்படைத்து தொடர்ந்து முயற்சி செய்தபோது, இயற்கை அன்னை நான் நினைத்ததைச் செய்ய எனக்கு உதவினாள். எந்த சிரமமும் இல்லாமல், இயற்கையின் அதிர்வு எனக்குள் புகுந்து சிரசாசனத்தை வெற்றிகரமாக செய்ய எனக்கு உதவியது. எவ்வளவு நேரம் என் தலையால் நான் நின்றிருந்தேன் எனத் தெரியவில்லை. ஆனால், கால்கள் கீழிறங்கியபோது என் வெற்றியின் களிப்பில் கண்களிலிருந்து பெருகிய நீருடன், மாயாஜாலத்தைக் கண்டெடுத்த சிறுமி போல அந்தப் பூங்காவில் நான் குதித்துக் கொண்டாடியதை என்னால் மறக்கவே முடியாது.”

அமலா பால் சிரசாசனம் செய்ய கட்டிடச் சுவர்களுக்கிடையில் ஏ.சி காற்றில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, இயற்கைக்கு நடுவே எடுத்த முயற்சிகள் அவரை வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்றிருக்கின்றன.

ஒரு செயலைச் செய்ய பின்பற்றும் நேர்வழி கடினமாக இருப்பதால், குறுக்கு வழியில் முயற்சி செய்வது தவறு என்று இதன்மூலம் உணர்ந்திருப்பதாகவும் அமலா பால் தெரிவித்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*