அனுஷ்காவின் உயிர் நேயம்..!!
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பிறந்த நாளான இன்று தனது பல வருடக் கனவு நனவானதாகக் கூறியுள்ளார்.
அனுஷ்கா ஷர்மா விலங்குகள் மேல் அன்பும் கருணையும் கொண்டவர் என்பது அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்துவரும் அவரது ரசிகர்களுக்குத் தெரியும். கோடைக்காலங்களில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க வேண்டும், தீபாவளி போன்ற திருவிழா சமயங்களில் விலங்குகளுக்குத் தொந்தரவு அளிக்காத வகையில் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டேவருகிறார்.
பிறந்த நாளான இன்றும் அவர் தனது ரசிகர்களை விலங்குகள் மற்றும் பறவைகள் மேல் கருணை காட்டும்படி கூறியதுடன், தான் எடுத்துள்ள புதிய முயற்சி குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். மும்பைக்கு வெளியே விலங்குகள் காப்பகம் ஒன்றைப் புதிதாகக் கட்டிவருகிறார். தனித்து விடப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்கவும் அன்பு செலுத்தவும் பராமரிக்கவும் இதை உருவாக்கிவருகிறார். “எனது பல வருடக் கனவு இதன் மூலம் நனவாகிறது. உங்களது நேரத்தையும் ஆதரவையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள் காதலரான விராட் கோலியைத் திருமணம் முடித்த பின் அனுஷ்கா ஷர்மா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.