மறதியின் மறுபிறவியான ஆர்யா..!!

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யா, சாயீஷா நடிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஹர ஹர மகாதேவகி படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

“பாட்ஷா, பில்லா, ரங்கா மாதிரி மாஸா வருவேன்னு பார்த்தா, நீ தர்மத்தின் தலைவன் படத்துல மறந்துபோற ரஜினிகாந்த்தோட மறுபிறவியா வந்து பொறந்துருக்கியேடா; நீ ரஜினிகாந்த் இல்ல கஜினிகாந்த்” என்று ஆர்யாவைப் பார்த்து அவர் அப்பா சொல்லும் காட்சி, இப்படத்தில் மறதி நோயால் ஆர்யா அவதிப்படும் விஷயங்களை காமெடி ஜானரில் சொல்லியிருப்பார்கள் என ட்ரெய்லர் பார்க்கையில் தெரிகிறது. இதுவரை பார்த்த படங்களிலிருந்து ஆர்யாவைப் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதே தோரணையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் வந்துபோகிறார். ஆர்யாவின் ஒவ்வொரு வசனத்திற்கும் சதீஷ் கவுண்டர் கொடுத்துள்ளதைப் பார்க்கும்போது, இது முழுக்க முழுக்க காமெடிப் படமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

“எவ்வளவு ஞாபக மறதி இருந்தும் எப்படிடா இவ்வளவு ஹேப்பியா இருக்கன்னு சம்பத் கேட்க, வாழறதுக்கு ஒரு வாழ்க்கை, செய்றதுக்கு ஒரு வேலை, லவ் பண்ணுறதுக்கு ஒரு மனசு இருந்தா யாரு வேணும்னாலும் சந்தோஷமா இருக்கலாம் …” என்கிற வசனமே ஆர்யாவின் கேரக்டரை பிரதிபலிக்கிறது.

பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் ரிலீஸாகி மெகா ஹிட்டான ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*