சூர்யாவுக்கு டாட்டா காட்டிய ரகுல்..!!
என்ஜிகே படப்பிடிப்பின் நடுவே பாலிவுட் சென்று அங்கேயும் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
செல்வராகவன் இயக்கும் என்ஜிகே திரைப்படத்தில் முதன்முறையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஆனால் ரகுல் ப்ரீத் சிங் 2009ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானதும் செல்வராகவனின் படத்தில்தான். 2004ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. அந்தப் படம் கன்னடத்தில் கில்லி என்ற பெயரில் ராகவ் லோகி இயக்கத்தில் ரீமேக் ஆனது. அந்தத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரகுல் அறிமுகமானார். தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
சூர்யா கதாநாயகனாக நடிக்கும் என்ஜிகே படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் அம்பாசமுத்திரம் நகரைப் போன்று பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்திற்குப் பின் தொடங்கிய படப்பிடிப்பு 25 நாள்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் ரகுல் ப்ரீத் சிங் பங்கேற்று சில நாள்கள் நடித்தார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் ரகுல் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.