சொந்தக் கதையை மறந்த பாரதிராஜா..!!

‘காட்டுப் பய சார் இந்த காளி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது நடிகர்கள் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள் என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற டைட்டிலில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், டைட்டிலை கண்ணியமான முறையில் வைக்கவேண்டும் என்றும் பேசிக்கொண்டிருந்த பாரதிராஜா திடீரென்று, ‘இப்படித்தான் காட்டுப்பய காளின்னு வசனம் குடுத்தேன் இன்னைக்கு நாட்டை ஆளணும்ங்குறான்’ என்று தொடங்கினார்.

“நாம வசனம் சொல்லிக் கொடுத்து, நாம பாட்டை சொல்லிக் கொடுத்து, ஆ…ஊ…ன்னு கத்தவிட்டு, கையில் ஒரு செயினை கொடுத்து, மக்களை முட்டாளாக்கி, கடைசியில நாட்டை ஆளணும்னு வர்றீங்க. பாலாபிஷேகம் பண்ணும் போதே தடுத்து நிறுத்தியிருக்கணும். கட்-அவுட்டுக்கு மாலை போடாதீங்க, கண்ணியமா படம் பாருங்கன்னு சொல்லியிருக்கணும்.

அன்னைக்கு ரசிகனை அப்படி கிளப்பிவிட்டு, முட்டாளாக்கிட்டோம். இப்ப அவன் வர்றேன்னு சொன்னா வா..வான்னுதான் கூப்பிடுவான். கடைசியில இப்ப நாட்டை ஆளப் போறோம்னு வர்றாங்க” என்று மிகவும் கொதித்துப்போய் பேசினார் பாரதிராஜா.

நடிகர்களுக்கு மட்டும் கட் அவுட் வைத்துக் கொண்டிருந்த காலத்தில் சென்னை கமலா தியேட்டரில் பாரதிராஜாவுக்கும் கட் அவுட் வைக்கப்பட்டதை அவர் மறந்திருக்கலாம். ஆனால், அவரைத் தொடர்ந்து கவனித்தும் கொண்டாடியும் வரும் ரசிகர்களும், நண்பர்களும் மறந்திருக்கமாட்டார்கள்.

மக்கள் முட்டாளாகிவிட்டார்கள் என்று சொல்லும் பாரதிராஜா, அவரும் அதற்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து வருத்தப்படுகிறாரா என்றும் விளக்கமாகச் சொல்லவில்லை.

ஆரம்ப காலங்களில் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தங்களது இடங்களை உறுதிபடுத்திக் கொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தற்போது அரசியலில் இறங்கி உள்ளார்கள் என்பதை மக்களும் மறந்திருக்கமாட்டார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*