நெகிழவைக்கும் பாலிவுட்: அதிதி..!!

பாலிவுட் திரையுலகினர் தன் மீது வைத்துள்ள அன்பு நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக நடிகை அதிதி கூறியுள்ளார்.

காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் அதிதி ராவ். தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் அறிமுகமாகவுள்ளார். ஸ்பேஸ் திரில்லர் பாணியில் தயாராகும் இந்தப் படத்தில் அதிதி விண்வெளி வீராங்கனையாக நடிக்கிறார். பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள அதிதி தற்போது தென்னிந்தியத் திரையுலகிலேயே தொடர்ந்து ஒப்பந்தமாகிவருகிறார்.

பாலிவுட்டில் தற்போது அவர் எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் Vogue India மாத இதழுக்கு அளித்த பேட்டியில், “நானே எனது படங்களைத் தேர்வு செய்கிறேன். என் கைவசம் ஒரு படமும் இல்லாதபோதும் பாலிவுட் திரையுலகினர் என் மீது காட்டும் மரியாதையும், எனக்கு அளிக்கும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

“எனக்கு இசை, நடனம், ஓவியம், வண்ணங்கள் ஆகியவை மிகவும் விருப்பமானவை. நடிப்பு என்பது அத்தனை கலைகளையும் உள்ளடக்கிய ஒரு கலை. நீங்கள் யாராகவும் எதுவாகவும் மாறலாம். இது பாதுகாப்பானதும் சவுகரியமானதும்கூட” என நடிப்பு குறித்துத் தனது பார்வையை அதிதி முன்வைத்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*