சிம்புவிற்கு வாய்ப்பு கொடுத்த காவிரி..!!

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு முதன் முறையாகக் கன்னடப் படத்தில் பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிவரும் ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்,ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கன்னடர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

அதில், “கர்நாடக மக்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தை இங்குள்ள அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர்; அந்த மாயத் தோற்றத்தை மாற்ற வேண்டும்; அதனால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீரைப் பகிர்ந்து அதனை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்” என்று கூறியிருந்தார். சிம்புவின் இந்தக் கோரிக்கையை அடுத்து கன்னட மக்கள், அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு தண்ணீரைப் பகிரும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். சிம்புவின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்கள் மனதிலும் சிம்பு இடம்பிடித்தார்.

இந்நிலையில், கன்னடத்தில் உருவாகியுள்ள ‘இருவூடெல்லா பிட்டு’ என்ற படத்தில் பாடல் ஒன்றை சிம்பு பாடவிருக்கிறார். இயக்குநர் கந்தாராஜ் கன்னலி இயக்கும் இப்படத்தில் நடிகை மேக்னா ராஜ், திலக் சேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இதுவரை தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சுமார் 60க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள சிம்பு, சில ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது காவிரி விவகாரத்தின் மூலம் கன்னட மக்களைக் கவர்ந்த சிம்பு, தனது முதல் கன்னடப் பாடல் மூலம் கர்நாடகாவில் இன்னும் பிரபலமாவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*