விஸ்வாசம்: பயணத்தைத் தொடங்கிய அஜித்..!!

விஸ்வாசம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித்குமார் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் தொடங்கவிருந்தது. ஆனால், டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

போராட்டம் முடிவடைந்து படங்கள் வெளியாவதும், படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி வரும் நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதிக்குப் பிறகே படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (மே 7) படப்பிடிப்பு தொடங்குவது உறுதியாகி உள்ளது.

விஸ்வாசம் படப்பிடிப்புக்காக அஜித் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் கிளம்பினார். அஜித் செல்லும் விமானப் பயணத்தை இசையமைப்பாளர் தமன், அஜித்தின் புகைப்படம் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்துக்கு அஜித் வருகை தந்த வீடியோவும் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட 25 நாள்களுக்கு மேல் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.

வீரம், விவேகம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*