சினிமாவுக்கு மொழி இல்லை..!!
‘இந்திப் பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றும்போது, பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாமல்தான் பணிபுரிவேன்’ என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா தெரிவித்துள்ளார்.
நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்டவர் பிரபு தேவா. இவர் விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தை வான்டட் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார். சல்மான் கான் நடிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தியில் அபினவ் காஷ்யப் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபாங்’ படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் ‘ஒஸ்தி’, தெலுங்கில் ‘கப்பர்சிங்’ என ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் ‘தபாங் 2’ உருவானது. அர்பாஸ் கான் இயக்கிய அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது இதன் மூன்றாம் பாகத்தை பிரபு தேவா இயக்குகிறார்.
சல்மான் கான் நடிக்கும் இந்தப் படத்தை அர்பஸ் கான் தயாரிக்கிறார். தபாங் சீரிஸின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சோனாக்க்ஷி சின்ஹா நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடன நிகழ்ச்சிக்காகக் கேரளா சென்றிருந்த பிரபு தேவாவிடம், இந்தி மொழி தெரியாமல் எப்படி இந்தியில் படம் எடுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சினிமாவுக்கு மொழி இல்லை. ஒரு படத்தின் மீது நமக்கு ஆர்வமும் காதலும் இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்தி எனக்குப் புரியும். ஆனால், பேச முடியாது. திரைத் துறையில் எனக்கிருக்கும் அனுபவமும் முதிர்ச்சியும்தான் எனக்கு உதவி செய்கிறது என்று நினைக்கிறேன். இந்திப் பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றும்போதுகூட, பாடல் வரிகளின் அர்த்தம் எனக்குத் தெரியாது. ஆனாலும் தொடர்ந்து அதைச் செய்து கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.