பாகுபலி 2: சீனாவில் குறைந்த வசூல்..!!

இந்தியத் திரைப்படங்களுக்கு சீனாவில் நல்ல சந்தை உருவாகியிருப்பதால் பாகுபலி 2 திரைப்படத்தின் சீன வெளியீட்டை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. ஆனால் முதல் மூன்று நாள்கள் வசூலில் இப்படம் பின்தங்கி ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்தியாவில் அதிக வசூல் ஈட்டிய படமாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 உள்ளது. சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் இப்படம் சீனாவில் வெளியானது. முதல் மூன்று நாள்களில் 7.63 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் ஈட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 51.2 கோடி ரூபாய் ஆகும். சமீபத்தில் சீனாவில் வெளியாகியுள்ள இந்தியப் படங்களோடு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான வசூல் இதுவாகும்.

ஆமிர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் வெளியாகி 27 மில்லியன் அமெரிக்க டாலரை முதல் மூன்று நாள்களில் பெற்றது. இந்திய மதிப்பில் இது 182 கோடி ரூபாய் ஆகும். இர்ஃபான் கான் நடித்த இந்தி மீடியம் திரைப்படம் 105 கோடி வசூல் ஈட்டியது. ஆமிர் கானின் தங்கல் திரைப்படம் 92 கோடி ரூபாயும், சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜன் இந்தியாவில் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து சீனாவில் இந்த ஆண்டு வெளியாகி முதல் மூன்று நாள்களில் 56 கோடி ரூபாயும் வசூலித்தன.

20 மில்லியன் டாலர் வசூலித்தால்தான் சீன விநியோகஸ்தர்கள் செலவிட்ட பணத்தைத் திரும்பப்பெற முடியும் என்று பாக்ஸ் ஆபிஸ் இந்தியா இணையதளம் தெரிவித்துள்ளது.

தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பஜ்ரங்கி பாஜன் போன்ற உணர்ச்சிகரமான சமூக சிக்கலைப் பேசுகின்ற படங்களுக்கு சீனாவில் வரவேற்பு உள்ளதாக சினிமா வர்த்தகம் குறித்து தொடர்ந்து எழுதிவரும் கம்ப்ளிட் சினிமா இதழின் ஆசிரியர் அதுல் மோகன் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 இந்திய காவியங்களின் பின்புலத்துடன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துணை கொண்டு உருவான பொழுதுபோக்கு திரைப்படம். “சீன ரசிகர்கள் இந்தியாவிலிருந்து வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படும் படங்களையே எதிர்பார்க்கிறார்கள். ஆக்‌ஷன் சார்ந்த கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கொண்ட படங்களைப் பார்க்க ஹாலிவுட்டையே நாடுகின்றனர்” என திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

சீனாவில் வசூலில் சாதனை படைத்த முதல் பத்து படங்களில் மூன்று ஹாலிவுட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*