முன்ஜாமீன் கேட்கும் அமீர்..!!
போலீஸாரை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கில், இயக்குநர் அமீர் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை தியாகராயநகர் பகுதியில் கடந்த மாதம் தலைக்கவசம் அணியாமல் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் சென்ற இளைஞர் பிரகாஷ் மாம்பலம் போக்குவரத்து காவலர்களால் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
போலீசாரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இயக்குநர் அமீர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் சில வாசகங்கள் போலீஸாரை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கருதப்பட்டு, அமீர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.