காலா: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தை வெளியிட தடை தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. அதன்படி ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, கரிகாலன் என்ற காலா தலைப்பு என்னுடையது என்ற மனுதரார் கூறியதற்கு எந்த ஆதாரம் இல்லை. மனுதரார் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் புகாருக்கு எந்த அடிப்படை முகாந்திரம் இல்லை. மேலும் படத்தின் கதை உள்ளடக்கிய விவரங்களை முறையாக பதிவு செய்யவில்லை. எனவே அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட தடை வதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்று கூறி கடந்த மாதம் 19ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று (மே 10) நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது, காலா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்றும், விசாரணைக்காக வழக்கை முன்கூட்டி பட்டியலிட முடியாது என்றும் கூறிய நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், வுண்டர்பார் பட நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.