நான் காட்சிப் பொருள் இல்லை..!!

ஹீரோவுடன் நடனமாடுவதையும், காட்சிப் பொருளாக வந்து செல்வதையும் நான் விரும்புவதில்லை என்று நடிகை மகிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.

த்ரில்லர் படங்களுக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்களும், வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த வகை படங்கள் பொழுதுபோக்கைத் தாண்டி, ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. தொடர்ந்து எத்தனை த்ரில்லர் படங்கள் வந்தாலும் அது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த வகையில் அருள்நிதி, அஜ்மல், மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு.மாறன் இயக்கியுள்ள திரைப்படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். இப்படம் நாளை (மே 11) வெளியாக உள்ள நிலையில் இப்படம் குறித்து நடிகை மகிமா நம்பியார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் வழக்கமாகப் படத்தின் கதையை வெகுநேரம் கேட்க மாட்டேன். ஆனால் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் கதையை மாறன் என்னிடம் சொல்லும் போதே நான் கதைக்குள் மூழ்கிவிட்டேன். அந்த அளவிற்கு அந்தக் கதை என்னை ஈர்த்தது. இப்படம் வழக்கமான த்ரில்லர் படமாக இல்லாமல் வேறு விதமாக மக்களைக் கவரும்படியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

“நான் அதிகமாக ரொமான்டிக் காமெடி படங்களை விரும்புவதாகச் சொல்கிறார்கள். நான் ஒன்றும் ரொமான்டிக் படங்களுக்கு ரசிகை இல்லை. பெண்களை முன்னிலைப்படுத்தும் தைரியமான கதாபாத்திரங்களையே நான் விரும்புகிறேன். அதற்காகப் பெண்ணை மையப்படுத்தும் படங்களை மட்டும் தான் தேர்வு செய்வேன் என்று கிடையாது. ஒரு படத்தின் 10 நிமிட கதாபாத்திரம் என்றாலும் அது வலுசேர்ப்பதாக இருக்க வேண்டும். ஹீரோவுடன் நடனமாடுவதும், காட்சிப் பொருளாக வந்து செல்வதையும் நான் விரும்புவதில்லை” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*