நான்கு வருடக் காத்திருப்பில் பியா..!!

பியா பாஜ்பாய் நடிப்பில் உருவாகியுள்ள அபியும் அனுவும் படத்தின் ப்ரோமோவும் வெளியீட்டுத் தகவல்களும் வெளியாகியுள்ளன.

பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் பியா பாஜ்பாய், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள படம் அபியும் அனுவும். நெருங்கிவா முத்தமிடாதே படத்திற்குப் பின் பியா பாஜ்பாய் தமிழில் நான்கு ஆண்டுகள் கழித்து களமிறங்கவுள்ளார். ஏற்கனவே வெளியான டீசரில் மொட்டைத் தலையுடன் பியா நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றிருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

வழக்கமான தமிழ்சினிமா கதைகளில் காதல் கைகூடுவதில்தான் பிரச்சினைகள் இருக்கும். இதில் பெற்றோர் சம்மதத்துடன் காதலரைக் கரம் பிடிக்கிறார் பியா. ஆனால் மணமான பின் இருவரும் சேர்ந்து வாழக் கூடாது என ஒரு நிர்பந்தம் வருகிறது. அதன் மூலம் புதிய பிரச்சினை வருகிறது. ஏன் எதற்காக அந்த நிர்பந்தம் என்ற கேள்விகளை உருவாக்கியுள்ளது புதிதாக வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோ.

சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரணின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். உதயபானு மகேஸ்வரன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். படம் மே 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் வலம்வரும் பியாவுக்கு பெரியளவிலான வெற்றி அமையவில்லை. பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்த அவருக்கு இந்தப் படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*