பிரபுதேவாவைத் திருமணம் செய்ய ஆசை..!!
நடிகர் பிரபுதேவாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக நடிகை நிகிஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா தனது மனைவியிடம் விவாகரத்து பெற்ற பின்னர் நயன்தாராவைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு நயன்தாராவுடனான தனது காதலை முறித்துக்கொண்டார். தற்போது திரைப்படங்களை இயக்குவதிலும் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார் பிரபுதேவா.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துவரும் நிகிஷா பட்டேல், பிரபுதேவாவைத் திருமணம் செய்துகொள்ள தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு பவன் கல்யாண் ஜோடியாக நடித்த ‘புலி’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுலகில் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு பாஸ்கரனுக்கு ஜோடியாக ‘தலைவன்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’, ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்தும் அவரால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’ என்னும் படத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் நமஸ்தே தெலுங்கானா என்ற இணையதள பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறேன். இந்திப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.
“2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழியில் மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறேன். எனக்கு நடிகர்களிலேயே பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். பிரபுதேவாவுடன் நடிப்பது பற்றித்தான் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் அவர் சம்மதித்தால் நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளவே தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.