வழக்கத்தை மீறும் ஒரு பேய் படம்..!!
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றுவிட்டால் அதே பாணியில் அடுத்தடுத்து படங்கள் உருவாகும். இப்படி உருவாகும் அனைத்துப் படங்களும் அதே போல் வெற்றியடையும் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் ஹாரர்-காமெடி ஜானரில் உருவாகும் படங்கள் எப்படியும் தோல்வியடையாமல் தப்பித்துவிடுகின்றன.
குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படங்களுக்கு ரசிகர்களிடையேயும் எப்போதும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான படங்கள் தேய்வழக்காக பாழடைந்த கட்டிடங்களையும், வெள்ளை நிற ஆடைகள் அணிந்த பேயையும் தொடர்ச்சியாகக் காட்டிவருகின்றன. இதை மாற்றி முழுக்க புதுமையாக, ஹாரர் காமெடி பாணியில் படம் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ‘பேய் எல்லாம் பாவம்’ படக்குழு.
அறிமுக இயக்குநர் தீபக் நாராயணன் இயக்கும் இந்த படத்தின் மூலம் கேரள நடிகை டோனா சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அரசு கதாநாயகனாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகரான அப்புகுட்டி காமெடி கேரக்டரில் நடிக்கிறார். ஒரு வீட்டிற்குள்ளேயே கதை நிகழ்கிறது. ஆனால் அது பாழடைந்த வீடு அல்ல. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரள – தமிழக எல்லைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுவருகிறது.