கேரளாவில் கடை விரிக்கும் சூர்யா..!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் என்ஜிகே படத்தைத் தொடர்ந்து விரைவில் அவர் கே.வி.ஆனந்த் படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தில் தற்போது மோகன்லால் ஒப்பந்தமாகியுள்ளார்.

அயன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் மாற்றான் திரைப்படம் மூலம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்தப்படம் வரவேற்பு பெறவில்லை. கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக சூர்யாவின் உடல் அசைவுகள் பதிவு செய்யப்பட்டன. அந்தப் பதிவு மூலம் எப்போது வேண்டுமானாலும் சூர்யாவை கிராஃபிக்ஸ் காட்சியில் உருவாக்கலாம் என்பதால் கே.வி.ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினரிடம் இருந்து அதை வாங்கிக்கொண்டார்.

படத்தின் தோல்வி மற்றும் சூர்யாவின் எதிர்பாராத நடவடிக்கை மூலம் சூர்யா-கே.வி.ஆனந்த் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என அப்போது திரையுலகில் பேசப்பட்டது. ஆனால் அதை மாற்றிக்காட்டி இருவரும் இணைந்து பணியாற்றும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலை முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

​சூர்யாவோடு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து நடிப்பார் என்று ஒரு தகவல் பரவிய நிலையில் மோகன்லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே விஜய் – மோகன்லால் இணைந்து நடித்திருந்த நிலையில், முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் சூர்யா. கேரளாவைப் பொறுத்தவரை அஜித், விஜய் படங்களைவிட சூர்யா படங்களுக்கான வரவேற்பு குறைந்த அளவிலேயே உள்ளது. தமிழ்ப் படங்கள் கேரளாவில் வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகளும், சொந்த சினிமாவின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு அதிகரித்துள்ளன. மோகன்லால் நடிப்பதால் மலையாள ரசிகர்களை சுலபமாக திரையரங்கிற்கு அழைத்துவர முடியும் எனக் கணக்கு போட்டு இந்த முயற்சியை எடுத்திருக்கிறார்கள் என்கின்றனர் வியாபாரம் பேசுபவர்கள். சூர்யா மே 6ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொண்டு மலையாள நடிகர் சங்கத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாகக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகாத இந்த படத்துக்கு, கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹிட் பாடல்களுக்குப் பெயர்பெற்ற கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய ‘கவண்’ படத்தில் புதிய இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி உடன் சேர்ந்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவரத் தவறியதால் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் சேர்ந்திருக்கிறார். ஜூன் 25ஆம் தேதி

தொடங்கும் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத், லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*