அம்மாவின் உண்மைக் கதை: சாவித்திரி மகள்..!!

முதன்முதலில் என் அம்மாவின் உண்மைக் கதை வெளியாகியிருக்கிறது என மகாநதி (தமிழில்: நடிகையர் திலகம்) படம் குறித்து சாவித்திரியின் மகள் விஜய சாமூண்டீஸ்வரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் நேற்று (மே 9) ரிலீஸாகியிருக்கிறது. சில காரணங்களால் தமிழில் நாளை வெளியாக இருக்கிறது. சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாவித்திரி போலவே தத்ரூபமாக அவர் நடித்துள்ளதாகப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (மே 9) மகாநதி படத்தின் சிறப்பு திரையிடல் காட்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சாவித்திரியின் மகளான விஜய சாமூண்டீஸ்வரி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். பின்னர் படம் குறித்து தன்னுடைய அபிப்ராயத்தை விஜய சாமூண்டீஸ்வரி கூறியுள்ளார்.

“படப்பிடிப்பின்போது அடிக்கடி என்னிடம் போனில் பேசுவார் கீர்த்தி சுரேஷ். அம்மா எப்படிச் சாப்பிடுவார் என்பது உள்பட அம்மாவின் பல மேனரிஸங்கள் பற்றி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். நான் இரண்டு முறை படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றிருக்கிறேன். ஷாட் முடிந்து அவர் என்னை நோக்கி வரும்போது, என் அம்மாவே என்னை நோக்கி நடந்துவருவதுபோல இருக்கும். என் அம்மாவைப் போல நடந்துகொள்ளும் ஆற்றல் இயல்பாகவே கீர்த்தியிடம் இருக்கிறது. அம்மாவைப் பற்றி அவருக்கு நான் 20 முதல் 25 டிப்ஸ்கள் வரை கொடுத்திருப்பேன். அது இல்லாமலேயே அவராகவே கிட்டத்தட்ட 12 மேனரிஸங்கள் வரை இயல்பாகவே கொண்டுவந்தார்.

எல்லா நடிகர்களுமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து எனக்கு ரொம்பவே சந்தோஷம். நான் மிகவும் எமோஷனலாக இருக்கிறேன். காரணம், முதன்முதலில் என் அம்மாவின் உண்மைக் கதை வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் ஏகப்பட்ட எதிர்மறையான வதந்திகள் வந்துள்ளன. ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க உண்மை” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*