இரும்புத்திரை: ஆர்யா தவறவிட்ட வாய்ப்பு..!!
விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ பட யூனிட்டுக்கு நடிகர் ஆர்யா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்து சமீபத்தில் வெளியான படம் ’இரும்புத்திரை’. நாயகியாக சமந்தா நடித்துள்ளார். வெளியான நாளிலிருந்தே இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த ஆர்யா, இப்படக் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆர்யா விஷாலுக்கு நெருக்கமான நண்பர், அதனால் வாழ்த்துக் கூறியிருக்கிறார் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால், அவரது இந்த வாழ்த்துக்குப் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.
ஆம். இந்தப் படத்தில் அர்ஜுன் ஏற்றுள்ள ’வொயிட் டெவில்’ என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்டவர் நடிகர் ஆர்யாதான். ஆனால் அது வில்லன் கதாபாத்திரம் என்பதால் அதில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆகவே, ஏற்கனவே ’கடல்’, ’மங்காத்தா’ போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், விஷால் தனது சிஷ்யர் என்கிற காரணத்தினாலும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தார் அர்ஜுன். இந்த நிலையில்தான் இப்படத்துக்கு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார் ஆர்யா.