அம்மா சென்டிமென்டில் நந்திதா..!!
நந்திதா நடிக்கும் நர்மதா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே15) நாகர்கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
ஜி.ஆர். மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சதீஷ் பி.சரண் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தைத் தொகுக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுகமாகிறார் கீதா ராஜ்புத். இதன் படப்பிடிப்பு இன்று நாகர்கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
படம் குறித்து பேசிய இயக்குநர் கீதா ராஜ்புத், “எமோஷனல் பேமிலி என்டர்டெயின்மென்ட் டிராமா ஜானரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. நாகர்கோவிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையரைப் பற்றி ’என்னைத் தேடிய நான்’, காதலை மையமாகக் கொண்டு ’மயக்கம்’ மற்றும் ’கபாலி’ என மூன்று குறும்படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். இயக்குநர் பாலாவிடம் தாரை தப்பட்டை படத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.