அதர்வா படம் தள்ளிப் போனது ஏன்?..!!
அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் செம போத ஆகாதே திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ச்சியாக மாற்றி அமைக்கப்படுவது ஏன் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதர்வாவுக்கு ஜோடியாக அனைக்கா, சக்ர போதி ஆகியோர் நடித்துள்ள ‘செம போத ஆகாதே’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி கவனம் பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆறு மாதங்கள் கழித்து தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வரும் மே 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே 25ஆம் தேதி வெளியாகும் என பின் அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஜூன் 14ஆம் தேதிக்குப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தள்ளிப்போனதற்கான காரணத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. “பாஸ்கர் ஒரு ராஸ்கல் மே 17ஆம் தேதி வெளிவந்ததால் மே 18ஆம் தேதி வெளியாக வேண்டிய செம போத ஆகாதே 25ஆம் தேதி வெளிவர திட்டமிடப்பட்டது. செம போத ஆகாதே மே 25ஆம் தேதி வெளிவந்தால் திட்டமிட்டபடி வரவேண்டிய 7 சிறிய படங்களுக்கு அதிக தியேட்டர் கிடைக்காது என்று 25ஆம் தேதி வரவிருக்கும் திரைப்படங்களான செம, பொட்டு, ஒரு குப்பை கதை, திருப்பதி சாமி குடும்பம், பேய் இருக்கா இல்லையா, கள்ளச் சிரிப்பழகி போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் செம போத ஆகாதே படத்தை சற்று தள்ளி வைக்கும்படி விஷால் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.
விஷாலும் அதர்வாவிடம் செம போத ஆகாதே படத்தை ஜூன் 14ஆம் தேதி வெளியிடும்படி கேட்டுக் கொண்டார். அதர்வாவும் சிறுபடத் தயாரிப்பாளர்களுக்காகத் தனது படத்தை ஜூன் 14ஆம் தேதி வெளியிடுவதாகப் பெருந்தன்மையுடன் உறுதியளித்துள்ளார். இதனால் சிறிய படத் தயாரிப்பாளர்கள் விஷாலுக்கும், அதர்வாவுக்கும் செம போத ஆகாதே திரைப்படத்தின் வெளியீட்டாளர் மதியழகனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களது திரைப்படங்களுக்கு 100 முதல் 150 திரையரங்குகள் வரை கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அதர்வாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதர்வா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிக் அஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.