3டி த்ரில்லரில் அஞ்சலி..!!

கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்துவரும் நடிகை அஞ்சலி, அடுத்ததாக 3டியில் உருவாகும் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பதினொரு ஆண்டுகளாகத் திரையுலகில் வலம்வரும் அஞ்சலி, நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கும் காளி படம் வெளியாகி வரவேற்பு பெற்றிருக்கிறது. இதனையடுத்து நாடோடிகள் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தற்போது புதிய படம் ஒன்றில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான திகில் படம் மைடியர் லிசா. 1987ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மலையாளத்தில் வெளியானாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது. தற்போது அதே தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. ஆனால் 3டியில் இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் நாயகன் விஜய் வசந்த் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாயகி குறித்தான அறிவிப்பை சஸ்பென்ஸ் வைத்தும் க்ளூ கொடுத்தும் கண்டுபிடிக்க அறிவிப்பை வெளியிட்டுவந்தனர். அதில் 2 தமிழக அரசு, 2 நந்தி விருது, 3 பிலிம்ஃபேர் விருது வாங்கிய நடிகை எனத் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்புக்குப் பின்னர் அஞ்சலி அந்த நாயகி என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்தப் படத்தை ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ஒளிப்பதிவாளரான பி.ஜி. முத்தையா படத்தை தயாரிக்கிறார். மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சலி இதற்கு முன்பு ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த பலூன் திரைப்படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவானது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*