எனது நடிப்புதான் ஹாலிவுட் வாய்ப்பு: தனுஷ்..!!

எனது நடிப்புதான் இந்த வாய்ப்புகளுக்குக் காரணமே தவிர கொலவெறி பாடல் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 3. இந்த படம் கலவையான விமர்சனம் பெற்றாலும், அனிருத் இசையமைப்பில் இடம்பெற்ற கொலவெறி பாடல் நாடு முழுவதும் ஒலித்தது.

தான் நடித்துள்ள ஹாலிவுட் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கான் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்தப் பேட்டியில் கொலவெறி பாடலைப் பற்றியும் பகிர்ந்துள்ளார் தனுஷ்.

கொலவெறி பாடல் செய்த மாயம் உங்களுக்கு எந்த விதத்தில் உதவியது. அந்தப் பாடலின் வெற்றி தமிழ் அல்லாத மற்ற மொழி திரைத்துறையில் உங்களுக்கு உதவியிருக்கிறதா என்ற கேள்விக்கு, “இல்லை. கண்டிப்பாக இல்லை. கொலவெறி எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதை நான் பல முறை கூறியிருக்கிறேன். அது எப்படி நடந்தது என்றே எனக்குத் தெரியாது. நான் அந்தப் பாடல் பற்றி பெருமையும் கொள்ளவில்லை. அது பிரபலமானது அவ்வளவுதான்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஆனால் எனக்கு முதல் இந்தி பட வாய்ப்பு வந்தது ஆடுகளம் படத்தினால்தான். அந்தப் படம் பார்த்த ஆனந்த் எல் ராய் இது போல ஒரு பையன் வேண்டும் என்று அவர் நினைத்ததினால், எனக்கு ராஞ்சனா வாய்ப்பு கிடைத்தது. அடுத்து இந்த சர்வதேச ஆங்கில படத்தின் வாய்ப்பும் ஆடுகளம், மரியான், 3 ஆகிய படங்களினால்தான். இந்த படங்கள் தான் எனக்குப் பெரிய வாய்ப்பை வாங்கித் தந்துள்ளன” என்றார்.

“ஒரு நடிகனாக, எனது நடிப்புதான் இந்த வாய்ப்புகளுக்குக் காரணமே தவிர கொலவெறி பெரிதாக எதுவும் செய்யவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அதனால் தொல்லைதான் நிறைய…” என்று தனுஷ் பதிலளித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*