நடிகைக்கு மிரட்டலா?: உண்மை என்ன?..!!

கடந்த வாரம் வெளியான ‘18-5-2009’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தன்யா பொய்யான புகார் அளித்துள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி நேற்று (மே 21) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை தன்யா மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “நடிகை தன்யா என்பவர் ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழர் அல்லாத மாற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதால் தமிழர்கள் மேல் இயற்கையாக இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கொண்டுள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுத்திருக்கும் ‘18.5.2009’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் தொலைப்பேசியில் மிரட்டுவதாகக் காவல் துறையிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார். மேலும், இந்தப் புகாரை மீடியாக்களுக்கு அனுப்பி கீழ்த்தரமான சுய விளம்பரம் தேட நினைக்கிறார் என்றே தெரிகிறது. இவரால் காவல் துறைக்கு அனுப்பப்பட்ட மனுவில் தனக்கு மட்டுமின்றி அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மிரட்டல் வருவதாகச் சொல்லியுள்ளார். புகார் உண்மையானதா என்பதைத் தெரிந்துகொள்ள புகார் கொடுக்கப்பட்ட நடிகை மற்றும் மிரட்டப்பட்டவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். உண்மையை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தப் புகார், பொய்யானதாக இருக்கும்பட்சத்தில் புகார் கொடுத்தவர்மீது உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்னியிடம் பேசினோம், “எங்கள் அமைப்பின் நோக்கம் உலக தமிழர்களை ஒருங்கிணைப்பது. இந்தப் பெண் கொடுத்த புகார் தவறானது என்று சொல்கிறோம். இந்தப் படம் ஒரு ஆண்டுக்கு முன்பே வெளியே வந்தது. ஆனால், அப்போதெல்லாம் எதிர்ப்பு இல்லை. அந்த நடிகையின் சுய விளம்பரத்துக்காக இதை செய்கிறார்கள்.

அது ஏன் படம் வருவதற்கு ஒரு நாள், இரண்டு நாள்களுக்கு முன் போய் புகார் கொடுக்கிறார்கள். நன்றாக யோசித்து பார்த்தால் விளம்பரம் ஒன்று மட்டுமே நோக்கம். எனக்கு வெளிநாட்டு மக்களோடெல்லாம் தொடர்பு இருக்கிறது. அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் எங்கேயும் இது போன்று பண்ண மாட்டோம், பண்ண வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை என்றார்கள்.

படத்தினுடைய இயக்குநருக்கு வெளிநாடுகளில் நண்பர்கள் இருக்கிறார்கள். அவரே ஏன் இது மாதிரி சொல்லி தங்கள் விளம்பரத்துக்காக செய்திருக்கக் கூடாது. அந்த நடிகையோட நம்பர் எத்தனைப் பேருக்கு முதலில் தெரியும். இது வேண்டுமென்றே செய்த செயலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். புலம்பெயர்ந்த தமிழர்களைக் குற்றம் சொல்வதை ஒரு நாளும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

சுயவிளம்பரம் தேடுவதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்று கேள்வி கேட்டபோது, “இவர்கள் புகார் தெரிவித்திருப்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது. இது போன்ற செயல்களால், உலக தமிழர்கள் இங்கு பேசுவதற்கே அச்சப்படுகிறார்கள். இங்குள்ள ஈழத்தமிழர்களின் நிலை இங்கு எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அதனால் போன் செய்து பேசினால் நம் மீது ஏதும் புகார் கொடுத்துவிடுவார்களோ என அச்சப்படுகிறார்கள்” என்று கூறினார்.

இதற்குப் பதில் கூறும் விதமாக நடிகை தன்யா பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் பிறந்தது சென்னையில்தான். என்னுடைய தாய்மொழி தமிழ்தான். மொழியைப் பயன்படுத்தி ஆதாயம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மிரட்டல் வந்தது தொடர்பான ஆவணங்களைப் போலீஸாரிடம் கொடுத்துள்ளேன். எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள்மீது போலீஸார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். இந்தப் படத்தில் நடித்ததால் எனக்குப் பலவகையில் மிரட்டல்கள் வருகின்றன. இருப்பினும் அதைத் தைரியமாக எதிர்கொள்வேன்” என்றார்.

இவ்விருவர் சொல்லும் புகார்களில் யார் சுய விளம்பரம் தேடுவதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்கிற உண்மை விசாரித்த பின்பே தெரியவரும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*