யாருக்கான படம்?: யுவன் விளக்கம்..!!

ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

பிக் பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடி சேர்ந்திருக்கும் படம் பியார் பிரேமா காதல். இளன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதோடு தயாரிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பேஜான் நாட்டில் நடைபெற்றது. தற்போது அது நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள யுவன் ஷங்கர் ராஜா, “இயக்குநர் இளன் என்னிடம் கதை சொல்லும்போதே இந்தக் கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஓர் இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் இயக்குநர் உட்பட அனைத்துக் கலைஞர்களின் உழைப்பைக் கண்டு பிரமித்துப் போனேன்” என்றார்.


ஹரிஷ் மற்றும் ரைசா ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரியும் இந்தப் படத்தின் பாடல் வெளியானபோதே பெரிதளவில் பேசப்பட்டது. அது குறித்து பேசியவர், “ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்துக்கு பிறகு மிகப் பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரிதான் ‘ஹை ஆன் லவ்’ பாடல் இணையதளத்தில் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களிடம் சென்று பெரும் வெற்றி பெற காரணம் என்றால் மிகை இல்லை” என்றார்.

பாடல் காட்சிக்காக சமீபத்தில் அசர்பேஜான் நாட்டுக்குச் சென்றது படக்குழு. அந்த அனுபவத்தைப் பகிர்ந்தவர், “பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்குச் சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான்தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று நான் உறுதியாகக் கூறுவேன்” என்று கூறினார் யுவன்.

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்‌ஷன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா, எஸ்.என்.ராஜ ராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ராஜு பட்டச்சாரஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்துகுமரன் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*