அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான கௌதம்..!!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பின் வெற்றி நாயகனான கௌதம் கார்த்திக் அந்த நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். அந்த படத்தின் பூஜை விழா சென்னையில் நேற்று மாலை (மே 21) நடைபெற்றது.

கதையின் தன்மையை அறிந்து புதுவித பரிசோதனை முயற்சியானாலும் அதில் முயற்சித்து வெற்றி கண்டு வருகிறார் கௌதம் கார்த்திக். சந்தோஷ் இயக்கத்தில் நடித்த ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய இரண்டு படங்களும் அத்தகைய பரிசோதனை முயற்சிகளே. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியான இரண்டு படங்களும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் கௌதம்.

‘தேவராட்டம்’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமைகளைப் பதிவு செய்யும் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் அவர், இந்த படத்தின் தலைப்பிலே அதை வெளிக்காட்டியிருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கௌதம் கார்த்திக், முத்தையா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*