கதாநாயகியாக அறிமுகமாகும் இனியாவின் தங்கை..!!
பாடகர் மனோவின் மகன் ரதீஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ரதீஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தின் மூலம் மற்றொரு நடிகையும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் நடிகை இனியாவின் சகோதரியான தாரா. ரஸாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மே 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாக்யராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதாநாயகி தாரா, “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம். இந்தப் படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போகப் போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்கத் தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர்தான் படத்தின் இறுதிக் காட்சியில் ஹீரோவுடன் நான் ஓட வேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்தக் காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்” என்று கூறியுள்ளார்.