விமர்சகர்களை விமர்சித்த கிருத்திகா..!!

காளி திரைப்படம் பற்றி விமர்சனம் செய்த விமர்சகர்களை விமர்சனம் செய்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

கடந்த வெள்ளிக்கிழமை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் காளி. இப்படத்துக்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தன. மேலும் இது குறித்து விமர்சனம் செய்த விமர்சகர்களிடம் தன் சார்பாக கேள்விகளை முன்வைத்திருக்கிறார் காளி படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஒரு படத்துக்கு விமர்சனம் என்பது முக்கியம். ஆனால் படத்தை நன்கு ஆராய்ந்து இது நன்றாக இருந்தது, இது ஒர்க்அவுட் ஆகவில்லை என்று சுட்டிக்காட்டினால்தானே எங்களுக்குத் தெரியும், காளி படத்தில் மூன்று கதைகளிலும் ஒரு விஷயத்தை கனெக்ட் செய்கிற மாதிரி வைத்திருப்பேன். இது பற்றி எந்த விமர்சகரும் கூறவில்லை.

ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்கிறோம் என்றால், அதில் சில விளக்கங்கள் இருக்கின்றன. கதையில் சின்னச் சின்ன விஷயங்கள் வைத்திருக்கிறோம். அதைப் பற்றி எதுவும் பேசாமல், எல்லோரும் ஒரே மாதிரி, ’கதை வந்து இப்படி, இவங்க நல்லா நடிச்சிருக்காங்க, இவங்க நல்லா நடிக்கலை, பாட்டு நல்லாருக்கு, நல்லா இல்லை’ என்று சொல்வது விமர்சனம் இல்லை.

விமர்சகரா உங்களிடம் நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், நீங்க எப்படி அப்டேட் ஆகுறீங்க; நீங்க எப்படி ஒரு படத்தை விமர்சனம் செய்கிறீர்கள் என்பதுதான்.

நீங்க ஆடியன்ஸாகப் பார்க்கும்போது பிடிக்குது, பிடிக்கல என்று சொல்லிடலாம். ஆனால் விமர்சனம் சொல்லும்போது பொறுப்பு இருக்கிறது. ஒரு படத்தில் விமர்சனம் என்று எடுத்துக்கொண்டால் அந்த படத்தில் கதாபாத்திரங்களை அனலைஸ் செய்வது, திரைக்கதை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பதை பற்றிப் பேசுவது என்பதை விட்டுட்டு விஜய் ஆண்டனி நடிப்பு பற்றியும், ஒன் லைனில் படத்தைப் பாருங்க, பார்க்காதீங்க என்றும் விமர்சனம் சொல்வது சரி இல்லை” என்று கிருத்திகா விமர்சகர்களை விமர்சித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*