ஒரு குப்பைக் கதை: வரன் தேடும் யோகி பாபு..!!
நடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் முக்கிய காட்சிக்கான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் தினேஷ். தற்போது நடனத்திலிருந்து அடுத்தபடியாக கதாநாயகனாக ஒரு குப்பைக் கதை படத்தின் மூலம் அறிமுகமாகிறார். காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. வருகிற மே 25ஆம் தேதி படம் வெளியாகிறது.
இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளின் வீடியோ ஒன்றை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். அதில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் யோகி பாபு, திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
கிட்டத்தட்ட 18 பெண்களுக்கு மேல் பெண் பார்த்தும் வரன் அமையாததால் 19 ஆவது பெண் பார்க்கும் வீட்டில் நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. பிக்பாக்கெட் அடித்தல், கஞ்சா வியாபாரம் செய்தல், பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் என பல பிரச்சினைகள் உள்ள அந்த வீட்டில் பெண் எடுப்பாரா என்கிற கேள்வியோடு அந்த காட்சிகள் முடிவடைகிறது. அந்த வீடியோ காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.