By June 21, 20180 CommentsReport

நாகேஷ் பேரனின் அடுத்த என்ட்ரி..!!

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக ஸ்கூல் கேம்பஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கறுப்பு வெள்ளை முதல் கலர் பிலிம் காலம்வரை 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருப்பவர் நடிகர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த்பாபுவும் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது மகனும், நாகேஷ் பேரனுமான கஜேஷ் ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். கஜேஷ், கல்கண்டு என்ற திரைப்படத்தின் மூலம் நான்காண்டுகளுக்கு முன் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் DR.ஆர் ஜே ராமநாராயணா இயக்கத்தில் உருவாகும் ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் கஜேஷ். இப்படத்தை ராமநாராயணா இயக்குவதோடு மட்டுமில்லாமல், ஏ எம் என் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரித்து, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவும் செய்கிறார் .

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் துவங்கி, பிறகு அந்தமான், நிகோபார் மற்றும் ஹேவ்லாக் தீவுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்திய கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

மேலும் இந்தப் படத்தில் கஜேஷ் நாகேஷுடன், ராஜ்கமல் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுக்கு ஜோடியாகக் கீர்த்தி, காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி, ராதிகா மாஸ்டர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் மற்றும் படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். தேவா இசையமைத்து வரும் இந்தப் படத்தில் பிரபல பாடகர்களான ஆஷா போஷ்லே, பி.சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடியுள்ளார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*