காட்ஃபாதருடன் இணைந்த கங்கனா..!!
கங்கனா ரணாவத் இயக்குநர் அனுராக் பாஸுவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான கங்கனா ரணாவத் அதன் பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர் வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் நடித்து முடித்துவிட வேண்டும் என்றில்லாமல் கதாபாத்திரமும் கதையும் ஈர்த்தால் மட்டுமே நடிக்கச் சம்மதிக்கிறார். நடிகர், நடிகைகள் கதை கேட்டுப் பிடித்திருந்தால் மட்டுமே ஒப்பந்தமாவார்கள் என்றாலும் கங்கனா அதில் மிகவும் கறாராக இருந்துவருகிறார். கதாநாயகர்களை ஒப்பிடுகையில் கதாநாயகிகளுக்குத் திரை வாழ்காலம் என்பது குறைவாகவே உள்ளது. இதை அவர் உணர்ந்திருந்தாலும் அதற்காகத் தனது கொள்கையைத் தளர்த்திக்கொள்ளாமல் எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியிலே வருகின்ற வாய்ப்புகளைக் கையாள்கிறார். இதனால் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக உள்ளன.
இருப்பினும் கங்கனா கைவசம் தற்போது நான்கு படங்கள் வரை உள்ளன. ராணி மனிகார்னிகா, மென்டல் ஹே கியா, அஸ்வினி ஐயர் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதோடு தன்னை திரையுலகில் நடிகையாக அறிமுகம் செய்த அனுராக் பாஸு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்ப காலங்களில் அவரோடு இணைந்து பணியாற்றிய நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அனுராக் பாஸுவைத் தனது ‘காட் ஃபாதர்’ என கங்கனா பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ரொமாண்டிக் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு இமாலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கங்கனாவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
கங்கனா மற்றும் ராஜ்குமார் ராவ் நடிக்கும் மென்டல் ஹே கியா படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றுவருகிறது. விரைவில் மும்பை திரும்பும் இவர், அடுத்து அஸ்வினி ஐயர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ‘இமாலி’ படத்தில் இணையவுள்ளார்.