தமிழ்படம் 2.0 – படத்தின் தலைப்பை மாற்றிய படக்குழு..!!
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0′ படத்தின் தலைப்பை `தமிழ்படம் 2′ என மாற்றிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
`ஜுரோவிற்கு மதிப்பில்லை என்பதால், தலைப்பில் இருந்து ஜுரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா மற்றும் சினிமா அல்லாது நடக்கும் அட்ராசிட்டிகளையும் படக்குழு அவ்வப்போது கலாய்த்து புகைப்படங்களை வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
சமீபத்தில் படத் தயாரிப்பாளர் சசிகாந்த், தலையில் கைவைத்தபடி குணிந்து உட்கார்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் அமுதன், தமிழ்ப்படம் 2 படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை இது என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.