By June 24, 20180 CommentsReport

பிக் பாஸ் 2 : எச்சரிக்கும் ஃபெப்சி..!!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) உறுப்பினர்கள் மிகக்குறைவாக வேலை பார்ப்பதால், பிக் பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று ஃபெப்சி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பிக் பாஸ் முதல் சீசனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காகச் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பொழுது போக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதுவரை 4 நாட்கள் வீட்டில் நடந்த சம்பவங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. கடந்த வருடமும் இதேபோல் சிக்கல் ஏற்பட்ட போது, கமலிடம் ஃபெப்சி அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி 50% ஃபெப்சி ஊழியர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிந்தார்கள். ஆனால் அதே பிரச்சினை இந்தமுறையும் தொடர்வதால் மீண்டும் போராட முடிவெடுத்துள்ளது ஃபெப்சி அமைப்பு.

ஃபெப்சி அமைப்பின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “ வெள்ளிக்கிழமைக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டதால் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. ஆனால் இதற்கு பிறகும் அவர்களுடைய படப்பிடிப்பில் எங்களுடைய ஊழியர்கள் கணிசமாகப் பணிபுரியவில்லை என்றால், வரும் சனிக்கிழமை முதல் பிக் பாஸ் 2 படப்பிடிப்பு நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார். இதை அடுத்து ஃபெப்சி அமைப்புடன் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் இந்த ஆண்டு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் குழுவும் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*