By June 25, 20180 CommentsReport

ரத்தம் தெறிக்கும் ‘அசுரவதம்’..!!

சசிகுமார், நந்திதா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள அசுரவதம் படத்தின் 2ஆவது ட்ரெய்லர் (ஜூன் 23) வெளியாகியுள்ளது. சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குநராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். மதுரையை மையமாக வைத்து 80களின் பின்னணியில் உணர்வுபூர்வமான ஒரு கதையை ரத்தம் தெறிக்கப் பதிவு செய்திருப்பார். அப்போதிருந்து தென் மாவட்டப் பின்னணியில் வன்முறைக் காட்சிகள் நிறைந்த படமாகவே சசிகுமாருக்குப் பெரும்பாலும் அமைந்துவருகிறது. கொஞ்சம் காமெடி காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் கட்டாயம் இடம் பெறும். இதே பாணியில் தொடர்ந்து களமிறங்கும் சசிகுமாருக்கு இது சில நேரங்களில் கைகொடுக்கிறது. பல நேரங்களில் ஏமாற்றம் அளித்துள்ளது. மருது பாண்டியன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படமும் இந்த கூறுகளை உள்ளடக்கியே உருவாகியுள்ளதைப் படத்தின் டைட்டிலும் மார்ச் மாதம் வெளியான முதல் ட்ரெய்லரும் எடுத்துக் கூறின. நேற்று வெளியாகியுள்ள ட்ரெய்லரும் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. “அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட” என்று கந்த சஷ்டி கவசத்தை கூறியபடி சசிகுமார் எதிரிகளை அடித்து நொறுக்குகிறார். முதல் ட்ரெய்லரில் இடம்பெற்ற சண்டைக் காட்சியே வெவ்வேறு கோணங்களில் இதிலும் காட்டப்பட்டுள்ளது. நந்திதா கடைசிக் காட்சியில் மட்டும் இடம்பெறுகிறார். சசிகுமார் தனது வழக்கமான பாணியில் இறங்கியிருக்கும் இந்த படம் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத்தருமா என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். ஜூன் 29ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=OihvNI_U0LU


Post a Comment

CAPTCHA
Refresh

*