By June 25, 20180 CommentsReport

ஸ்பெஷல்: எலிமினேட் ஆகும் முதல் நபர் ‘பிக் பாஸ்’?..!!

பிக் பாஸ் படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதையடுத்து அங்கு நடைபெறும் பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ஃபெப்சி தொழிலாளர்களின் தரப்பில் கேட்கப்படும் கேள்விக்கு பிக் பாஸ் தரப்பு முறையான பதிலளிக்காததால் அடுத்தகட்ட போராட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர் திரையுலக தொழிலாளர்கள்.

பிரச்சினை என்ன?

ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கும் திரையுலகத் தொழிலாளர்களை வைத்தே அங்கு நடைபெறும் படப்பிடிப்புக் காட்சிகளை நடத்த வேண்டும் என சட்டம் இல்லை. ஆனால், குறைந்தபட்சம் 50 சதவிகிதம் தொழிலாளர்களையாவது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கிலும் வேலைக்கு வைக்கவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தப்படுகிறது. இது அந்தந்த மாநிலத் திரையுலகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதாக இருக்கிறது. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலும் 50 சதவிகிதம் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியக் கூடாதா?

90 சதவிகிதம் வட இந்திய தொழிலாளர்கள் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிகிறார்கள். அதில் இருக்கும் 10 சதவிகிதம் தமிழகத் தொழிலாளர்களும் கூடத் துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பு எனத் தமிழில் நிகழ்ச்சி நடத்துவதற்குத் தேவையான அடிப்படைப் பதவிகளிலேயே இருக்கின்றனர். மீதமிருக்கும் 90 சதவிகிதம் தொழிலாளர்களும் வட இந்திய மாநிலங்களின் ஓரளவுக்கு நிலைபெற்றிருக்கும் திரையுலகிலிருந்து அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

நஷ்டம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் படமாக்கப்படுவதால், சட்ட விதிகளுக்குட்பட்டு 3 ஷிப்டுகளாக தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஒரு ஷிப்டில் குறைந்தது 100 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களில் 75 பேர் ஃபெப்சி தொழிலாளர்களாக இல்லாததுதான் பிரச்சினை. அங்கு பணிபுரிபவர்களில் குறைந்தபட்ச சம்பளமாக ஃபோட்டோ ஃப்ளட் பதவியிலிருப்பவருக்கு 735 ரூபாய் ஒரு ஷிப்டுக்குக் கொடுக்கப்படுகிறது. 100 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் இவருக்கு பதிலாக, வேறொரு மாநிலத்தவர் பணிபுரியும்போது, அந்தப் பதவியில் இதற்கு முன்பு பணிபுரிந்த உள்ளூர் தொழிலாளருக்குக் கிட்டத்தட்ட 73,500 ரூபாய் கிடைக்காமல் போகிறது. அதே சம்பளத்தை மீதமிருக்கும் 74 பேருக்கும் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 5 மாதத்தில் கிடைக்க வேண்டிய 75 லட்ச ரூபாய் வருமானத்தை பிக் பாஸ் தடுக்கிறது. இது ஒரு ஷிப்டுக்கான சம்பளம்தான்.

இது நியாயமா?

இப்போது தமிழ்த் திரைப்படத் துறையில் கொடுக்கப்படும் சம்பளத்துக்காகப் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது ஃபெப்சி தொழிலாளர்கள் சங்கம். அந்தப் போராட்டங்களின் விளைவாகப் பெற்ற சம்பளத்தைவிடக் குறைவான சம்பளமே வட இந்திய தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் போக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தியதோடு முடிந்துவிடுவதில்லை. அடுத்து வருபவர்களும் இவர்களைப் போலவே வெளி மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டுவருவார்கள். ஒரு காலத்தில் பரபரவென இயங்கிய தமிழ் சினிமா ஸ்டூடியோக்களில் இந்தியப் படங்கள் அனைத்தும் படமாக்கப்பட்டன. அப்போது பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்து தமிழ்த் திரையுலகத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களை நம்பியே பல்வேறு தொழில்களையும் கைவிட்டு ஃபெப்சி தொழிலாளர்களாகச் சேர்ந்து தங்களது வாழ்வையே மாற்றிக்கொண்டவர்கள் தற்போது வேலை செய்பவர்கள். இவர்களைத் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக பிக் பாஸ் ஒதுக்குவது நியாயத்துக்குப் புறம்பானது என்கின்றனர் ஃபெப்சி தொழிலாளர்கள்.

பிக் பாஸ் ஏன் புறக்கணிக்கிறது?

சென்ற முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிந்தவர்கள் இம்முறையும் வேலை கேட்டபோது வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டது பிக் பாஸ் புரொடக்‌ஷன் குழு. ஏன் எனக் கேள்வியெழுப்பியதற்கு, இங்கு நடப்பதை வெளியில் சொல்லிவிடுகிறார்கள் என்ற காரணம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைவிட சிறந்த நகைச்சுவையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் எந்த சீசனிலும் இடம்பெற வைக்கமுடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தமிழ் சேனல்களுக்கு அது புதிதே தவிர தமிழ் ரசிகர்களுக்கு இது புதிதல்ல. பல வருடங்களாக இந்தியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கும் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் இந்தி சேனல் ரசிகர்கள் தமிழகத்தில் அதிகம். அதில் இடம்பெறாத எந்தப் புதுவிதமான நிகழ்வுகளையும் ‘பிக் பாஸ் தமிழ்’ செய்துவிடவில்லை. “ஜனனி மற்றும் ஐஸ்வர்யா பரிமாறிக்கொண்ட லிப்-லாக் காட்சி, இந்தி பிக் பாஸில் பல வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற ஒன்று. எலிமினேஷன் – நாமினேஷன் ஆகியவற்றில் மட்டுமே பிக் பாஸ் ஏதாவது புதிதாகச் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி, தாடி பாலாஜி ஜோக்குகளும், மமதி, மும்தாஜ், பொன்னம்பலம் ஆகியோரின் மறுமுகங்களும் ஏற்கனவே அறியப்பட்டவை. குறிப்பாக, இவர்களுடன் இத்தனை வருடங்களாக பணிபுரிந்த ஃபெப்சி தொழிலாளர்களுக்குத் தெரியாததா?” என்கிறார் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரியும் நபர்.

அடுத்து என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மொத்தத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து, அடுத்ததாக வெளி மாநிலத் தொழிலாளர்களுடன் தமிழகத்துக்கு வரும் படக்குழுவினருக்கு எச்சரிக்கை தெரிவிக்கவே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். மற்றபடி பிக் பாஸ் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஃபெப்சி செய்துவிட்டது. தொழிலாளர்களை வெளி மாநிலங்களிலிருந்து அழைத்துக்கொண்டு வந்திருந்தாலும், படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் தமிழ்த் திரையுலகிலிருந்தே வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கொடுக்காததன் மூலம் சுலபமாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவிடலாம் என்கின்றனர் ஃபெப்சி தொழிலாளர்கள்.

பணம் மட்டுமே பிரதானமானதாக இருந்திருந்தால் ஃபெப்சி தொழிலாளர்களையே வேலைக்கு எடுத்திருக்கும் பிக் பாஸ். ஏனென்றால், வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் தங்குவதற்கு பூந்தமல்லியைச் சுற்றியுள்ள பல ஹோட்டல்களிலும், லாட்ஜ்களிலும் வாடகை அறைகளை எடுத்திருக்கிறது பிக் பாஸ் குழு. தங்கும் செலவு, போக்குவரத்துச் செலவு, உணவு எனச் செலவழிக்கப்படும் பணத்தைவிட ஃபெப்சி தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவுதான்.


Post a Comment

CAPTCHA
Refresh

*