By June 25, 20180 CommentsReport

ரஜினி- எஸ்.பி.பி கூட்டணி சென்டிமென்ட்..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தில், ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் எதிர்பார்த்த அளவு மக்களிடையே வரவேற்பைப் பெறாமல் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனபோதும், தற்போது தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்து வந்தார். ஆனால், இப்படத்தின் மூலம் முதன்முறையாக அனிருத்துடன் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாட இருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. அதற்கு மாறாக பாபா, கபாலி, காலா உள்ளிட்ட சில படங்களில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடவில்லை. இப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சரிவைச் சந்தித்தன. ( அதேநேரம், பெரிய வெற்றியைத் தந்திராத கோச்சடையான் மற்றும் லிங்கா போன்ற படங்களிலும் எஸ்.பி.பியே பாடியிருந்தார் என்பது தனிக்கதை)

இந்தக் காரணங்களினாலோ என்னவோ தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை மீண்டும் எஸ்.பி.பியே பாட இருக்கிறார். சென்டிமென்டிற்காக படக்குழு இந்த முடிவை எடுத்ததா அல்லது கதாபாத்திரத்திற்கு அவரது குரல் தேவைப்பட்டதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால வெற்றிக் கூட்டணியான ரஜினி – எஸ்.பி.பி மீண்டும் இப்படத்தின் மூலம் இணைவது, இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*