காதலியைக் கரம்பிடித்த ஆர்யா தம்பி..!!
நடிகர் ஆர்யாவின் தம்பியும், நடிகருமான சத்யாவுக்கு நேற்று (ஜூன் 23) சென்னையில் திருமணம் நடைபெற்றது. இயக்குநர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் எனும் படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் சத்யா.
அதன்பின் எட்டுத்திக்கும் மதயானை, அமரகாவியம் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் அவரது அண்ணன் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சத்யாவுக்கும் அவரது நெடுநாள் காதலியான பாவனா என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்த இந்தத் திருமணத்தில் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.
திரைப்பிரபலங்களில், நடிகர் சிம்பு,சாந்தனு, வெங்கட்பிரபு மற்றும் சயீஷா, டிவி தொகுப்பாளர் டிடி போன்றோர் இதில் கலந்து கொண்டனர். சுவாரஸ்யமான விஷயமாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அகதா, சீதா லெட்சுமி, ஸ்வேதா, கோமதி போன்ற சிலரும் இதில் கலந்துகொண்டனர். ஜூன் 22ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.