திரைப் பாடகராகும் தோட்டத் தொழிலாளி..!! (வீடியோ)

சங்கர் மகாதேவன் பாடிய பாடலைப் பாடிச் சமூக வலைதளத்தில் பதிவேற்றிய தோட்டத் தொழிலாளி விரைவில் பாடகர் சங்கர் மகாதேவனோடு இணைந்து பாடவுள்ளார்.

இணையத்தின் அசுர வளர்ச்சி திறமை படைத்தவர்களை சரியாக இனம்கண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருகிறது. தோட்டத் தொழிலாளி ஒருவர் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ‘உனை காணாத நான் இங்கு..” பாடலைத் தனது வேலைச்சூழலில் பாடியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் கோபி சுந்தர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர வீடியோ சங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றது. அதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த சங்கர் மகாதேவன், அவரைப் பற்றிய தகவல்களைத் தனக்குத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் இவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

சங்கர் மகாதேவனின் ட்விட்டும் வீடியோவும் பரவ தற்போது கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்பவர் அந்தப் பாடலை பாடியது தெரியவந்தது. ராகேஷ் உன்னியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் சங்கர் மகாதேவன். அதை ராகேஷ் உன்னி வீடியோவாக வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். “சங்கர் மகாதேவன் சாரை நேரில் பார்க்கவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் நேரில் பார்க்க மட்டுமல்ல விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார். இந்த வீடியோவைக் கொண்டு சேர்த்த சமூகவலைதள நண்பர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். தொடர்ந்து அந்நியன் படத்தில் இடம்பெற்ற ‘குமாரி’ பாடலைப் பாடியுள்ளார். இந்த வீடியோவையும் சங்கர் மகாதேவன் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*