வசூல் சாதனை படைத்த ‘சஞ்சு..!!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சஞ்சு கடந்த வெள்ளி (ஜூன் 29) அன்று வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்தியத் திரையுலகில் தொடர்ந்து பல மொழிகளில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகிவருகின்றன. பெரும்பாலும் விளையாட்டு வீரர்களை மையமாக வைத்து உருவாகும் இத்தகைய பயோ-பிக்குகளில் இருந்து சஞ்சு திரைப்படம் சற்று வித்தியாசமானது. ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு அவர் வாழும் காலத்திலேயே உருவாவதால் பாலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே சஞ்சு படத்தை எதிர்பார்த்தது.

சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார் என்று தகவல் வெளியானபோது சஞ்சய் தத்தின் ஆளுமையைத் தோற்றத்திலும் உடல் மொழியிலும் எப்படி வெளிப்படுத்துவார் என்று பாலிவுட் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டது. ஆனால், படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகக் கேள்வி எழுப்பியவர்கள் எல்லாம் படத்தின் வெளியீடு எப்போது என கேட்கத் தொடங்கினர். அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்ததை மூன்று நாட்கள் வசூல் நிரூபித்துள்ளது.

வெள்ளிக்கிழமை 34.75 கோடியும் சனிக்கிழமை 38.60 கோடியும் வசூலித்த சஞ்சு திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை 46.71 கோடி ரூபாயை வசூலாகப் பெற்றுள்ளது. இதனால் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 120.06 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் மூன்று நாள்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒரே நாளில் அதிக வசூல் ஈட்டிய இந்தி திரைப்படம் என்ற பெருமை பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பிற்கு இருந்தது. வெளியான மூன்றாம் நாள் 46.50 கோடி ரூபாயை வசூலித்திருந்தது அப்படம். ஞாயிற்றுக்கிழமை 46.71 கோடி ரூபாயை வசூலித்து அந்தச் சாதனையை சஞ்சு முறியடித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*