கமர்ஷியல் நாயகனாக மாறும் ஜெய்..!!

ஜெய் நடிப்பில் உருவாகிவரும் ஜருகண்டி படத்தின் டீசர் (ஜூலை 6) வெளியாகியுள்ளது.

கலகலப்பு படம் போன்று காமெடியில் கவராவிட்டாலும் ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு உருவாகியிருந்தது கலகலப்பு 2. டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக வேலை நிறுத்தம் நடைபெற்றிருந்த போது புதிய படங்கள் வெளியாகாமல் கலகலப்பு 2 பல திரையரங்குகளில் தொடர்ச்சியாகத் திரையிடப்பட்டது. ஜெய் நடிப்பில் வெளியான அப்படத்தைத் தொடர்ந்து ஜருகண்டி, பார்ட்டி, நீயா 2 ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.

மலையாளத்தில் வெளியான ஜேக்கப்பின்டே சுவர்க்கராஜ்ஜியம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்ற ரெபா மோனிக்கா ஜான், ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏ.என்.பிச்சுமணி இயக்குகிறார். ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜெய் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. சுப்ரமணியபுரம், சென்னை 28, ராஜா ராணி போன்ற குறிப்பிட்ட படங்களில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்து பேசப்பட்டது. ஜருகண்டி படத்தின் மூலம் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் செய்து காட்ட முயன்றுள்ளார்.

சொந்தமாகத் தொழில் தொடங்க வங்கியை நாடும் ஜெய்க்கு கடன் கிடைக்காததால் கடத்தல் கும்பலுடன் சேர்கிறார். அதனால் நடைபெறும் சம்பவங்கள் திரில் மற்றும் காமெடி கலந்து சொல்லப்படுகிறது. ரோபோ சங்கர், டேனியல் ஆகியோர் ஜெய்யுடன் இணைந்து காமெடி செய்கின்றனர்.

ஷர்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரிக்கிறார். போபோ ஷஷி இசையமைக்க அரவிந்த் குமார் – ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

46 நாள்களில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு நிறைவு செய்து இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*