By July 20, 20180 CommentsReport

இஸ்ரோ விஞ்ஞானியாக மாதவன்..!!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் மாதவன் நடிக்கவுள்ளார்.

நடிகர் மாதவன் தமிழில் ஆரம்பகாலக் கட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். இந்தி, ஆங்கிலம் என நடிக்க ஆரம்பித்த பின் தமிழில் சிறிது இடைவெளி விழுந்தது. அதுபோக தமிழில் அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. 2016ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் தமிழில் அவருக்கு மீண்டும் ஒரு பிரேக்காக அமைந்தது. அதன்பின் நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து தற்போது தமிழில் நடித்து வருகிறார் மாதவன். அந்த வகையில் மாறா என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மாதவன் அதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இப்படத்தை இயக்குகிறார். நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994ஆம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களை பாதிப்புகளை ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார்.

இந்த புத்தகத்தை தழுவி உருவாகும் இந்த படத்தில் மாதவன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் பற்றிய பிற தகவல்கள் விரைவில் வெளிவர உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*