By July 22, 20180 CommentsReport

சென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..!!

தமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமையை அளித்ததில்லை. மாறாக எல்லா மொழியில் இருந்தும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் சிறந்த கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தே வந்திருக்கிறது. நீங்கள் ஒரு உதாரண பட்டியல் வாசித்தால் அது எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போகும். கலை திறன்கள் சங்கமித்து ஒரு பெருங்கடலை உருவாக்கும் ஒரு முக்கிய இடமாக தமிழ் சினிமா விளங்குவதாக நடிகை நமீதா பிரமோத் தன் ஆழ்மனதில் இருந்து உணர்கிறார். மேலும் அவர் இதை பற்றி குறிப்பிடும்போது, “கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. எங்கள் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நானும் எப்போதும் தமிழ் சினிமாவின் கிரியேடிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறேன்” என்றார்.

நமீதா பிரமோத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கம்மர சம்பவம். அதன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் நமீதா பிரமோத். சித்தார்த், திலீப் ஆகியோருடன் நமீதா நடித்த ‘பானுமதி’ கதாபாத்திரம், கூடுதல் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த வெற்றி தற்போது திலீப்புடன் 3D படத்தில் இணைந்து நடிக்க்கும் வாய்ப்பை நமீதா பிரமோத்துக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் “இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சி. பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மலையாளத்தில் பெற்ற வெற்றியையும், அங்கு நடித்துக்கொண்டிருக்கும் படம் பற்றிய தகவலையும் ஏன் தமிழ் ரசிகர்களிடம் நமீதா பகிர்ந்துகொள்கிறார் என்ற கேள்வி எழும். அதற்குக் காரணம், கம்மர சம்பவம் திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் பலரையும் ஈர்த்திருக்கிறது. தமிழகத்தில் வெளியான தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பும், சமூக வலைதளங்களில் தமிழ் ரசிகர்கள் நமீதாவை பாராட்டி எழுதியிருக்கும் குறிப்பிகளையும் உணர்ந்து, வெற்றிப் பாதையில் இருக்கும்போதே தமிழ்த் திரையுலகிலும் நுழைந்துவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் நமீதா. இதன் தொடர்ச்சியாக மலையாளத்தில் வெற்றிபெற்றது போலவே தமிழிலும் தனது பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார்.

நமீதா பிரமோத்தின் பெயர் வெளியில் தெரியும் முன்பே பலரையும் ஈர்த்தது அவரின் சிறப்பான நடன திறமை. பாரம்பரிய நடனத்திற்கென தனியாக சிறப்பு பயிற்சி எடுத்திருப்பார் என்று வெளியான தகவலுக்கு பதிலளித்துள்ள நமீதா “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடனத் திறமையை வளர்த்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*