By July 22, 20180 CommentsReport

மோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..!!

விருது நிகழ்ச்சியில் மோகன்லால் பங்கேற்றால், அந்த விழாவையே தான் புறக்கணிப்பதாக இயக்குநர் பிஜு தெரிவித்துள்ளார்.

கேரள மாநில சினிமா விருது நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனால் இவ்விழாவை ஏற்பாடு செய்த கலாச்சார துறை அமைச்சர் ஏ.கே.பாலனை,பிரபல மலையாள இயக்குநர் பிஜு கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து ஜூலை 17ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,“மாநில விருது விழாவுக்கு மோகன்லால் அழைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அமைச்சர் வேறு உலகத்தில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. கேரள சினிமாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் அறிகிறாரா? பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் குற்றவாளிக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அம்மா அமைப்பின் தலைவரை முக்கிய அழைப்பாளராக அழைக்கலாமா?” எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும்,“விருது வாங்குகிறவர்கள்தான் விழாவில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எவ்விதத் தொடர்பும் இல்லாத மோகன்லால் ஏன் விழாவுக்கு அழைக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை. சினிமா துறையில் தற்போது நடக்கும் அறம் தவறிய செயல்களின் மீதும் மிகைப்படுத்தப்படும் நடிகர்களின் நாயகத்தனங்களின் மேலும் கோபத்தில் உள்ள சினிமா ரசிகர்களின் உணர்வுகளை விழாக்குழு புரிந்துகொள்கிறதா?

மோகன்லால் விழாவிற்கு வந்தால் நான் இந்த விழாவை உறுதியாகப் புறக்கணிக்கிறேன். அரசியல், சமூக அறிவுபெற்ற படைப்பாளிகளும் இதைப் புறக்கணிப்பார்கள் எனக் கருதுகிறேன். இதுபோன்ற நிராகரிப்புகளும்கூட சரியான எதிர்வினைதான், சரியான அரசியல் நிலைப்பாடுதான்” என்றார்.

இந்தப் பதிவினால் மலையாள சினிமாவில் மீண்டும் சலசலப்புகள் கிளம்பியுள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*