By July 28, 20180 CommentsReport

ஹாலிவுட்டுக்குப் போன பொன்னியின் செல்வன்.!!

ஆக்வாமேன் டிரெய்லரை ரிலீஸ் செய்து ஹாலிவுட்டில் ஒரு சுனாமியைக் கிளப்ப வேண்டும் என்பது DC நிறுவனத்தின் திட்டம். அதற்கான மெனக்கெடல்களை முழுவதுமாக எடுத்துவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், முழுவதும் ஏமாற்றங்களைச் சுமந்து வந்திருக்கிறது ஆக்வாமேன் டிரெய்லர்.

மகுடத்தை விரும்பாத தம்பி. உலகையே ஆள நினைக்கும் அண்ணன். நல்லதொரு ஆட்சியை நிலைநிறுத்த மகுடத்தை இளையவனுக்கே வாங்கிக்கொடுக்க நினைக்கும் குடிமகள் என ஆக்வாமேன் திரைப்படத்தில் கேரக்டர்களை உருவாக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏற்கனவே பல படங்களில் பார்த்து சலித்து ஒதுக்கிவிட்ட கதை. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையைச் சாயலாகக் கொண்டது என்று கூறினால் சுலபமாகப் புரிந்துகொள்ளமுடியும்.

இதுவரை ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹீரோ கதைகளிலிருந்து மாறுபட்டிருப்பது, அதிகம் கடலில் நடைபெறும் காட்சிகளாகவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுதான். இங்கு, ‘சண்டையை நிலத்துக்குக் கொண்டுவரும் முயற்சி’ என்று குறிப்பிட்டிருப்பது, கடலில் நடைபெறும் காட்சிகள் அதிகமாக இருக்குமா என்ற சந்தேகத்தையும் உருவாக்கியிருக்கிறது.

DC நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் மார்வெல் பிளாக் விடோ கேரக்டரை சிவப்பு நிறத் தலைமுடியுடன் மாற்றியதுபோல, இந்தப் படத்தில் வரும் ஹீரோயினை சிவப்பு நிற முடியுடன் அறிவித்திருக்கிறார்கள். வழக்கம்போல சூப்பர் ஹீரோ கதைகளை அசைபோட்டுப் பழக்கமான ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது ஆக்வாமேன் டிரெய்லர். மற்றபடி வெளி ரசிகர்களை உள்ளே கொண்டுவருவதற்கான முயற்சிகள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*