By July 30, 20180 CommentsReport

சூர்யா படத்தில் இணைந்த பாடலாசிரியர்..!!

சூர்யா நடிக்கும் படத்தில் முதன்முறையாகப் பாடலாசிரியர் விவேக் இணைந்துள்ளார்.

டிரெண்டுக்கு ஏற்ற வரிகளை அமைத்து இளைஞர்களைக் கவரும் இளம் பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேக். எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் அறிமுகமான விவேக், சந்தோஷ் நாராயணன், அனிருத், இமான், ஹிப் ஹாப் ஆதி, ஷேன் ரோல்டன் உள்ளிட்ட இளம் இசையமைப்பாளர்களிலிருந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியிருந்தார். அப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது சர்கார் படத்திலும் ரஹ்மான் – விவேக் கூட்டணி தொடர்கிறது. 25 படங்களுக்கும் மேல் பாடல்கள் எழுதியுள்ள விவேக் முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்திற்கு பாடல்கள் எழுதவுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆகியவற்றில் சூர்யா தற்போது கவனம் செலுத்திவருகிறார். இதைத் தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளதை விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*